ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் 2 ஆவது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பந்து வீச்சாளர்களில் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம்பிடித்த 3 ஆவது பங்களாதேஷ் வீரர் எனும் பெருமையை மெஹிதி ஹசன் பெற்றார்.
இதற்குமுன் சகிப் அல் ஹசன் 2009 ஆம் ஆண்டில் முதலிடத்திலும், 2010 ஆம் ஆண்டு அப்துர் ரசாக் 2 ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர்
இலங்கைக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதை தொடர்ந்து மெஹிதி ஹசன் 3 இடங்கள் முன்னேறி 725 புள்ளிகளுடன் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் உள்ளார். 3 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மானும், 4 ஆவது இடத்தில் நியூசிலாந்து வீரர் மெட் ஹென்றியும் உள்ளனர். 5 ஆவது இடத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார்.
இதனிடையே, பங்களாதேஷ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் 8 இடங்கள் நகர்ந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு 5 ஆவது இடம் வரை அவர் முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 857 புள்ளிகளுடனும், ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதேநேரம், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் 396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது