January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது பங்களாதேஷ் அணி!

முஷ்பிகுர் ரஹீமின் அபார சதம், மெஹிதி ஹஸன் மீராஸ், முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசனின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியால் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி 103 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-0 என பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

அத்துடன், பங்களாதேஷ் அணி முதல் முறையாக இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் உதவியால் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டது.

முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்து ஆட்டநாயகனான முஷ்பிகுர் ரஹீம் மீண்டும் அபாரமாக துடுப்பெடுத்தாடி தனது 8 ஆவது ஒருநாள் சதத்தை  பூர்த்திசெய்து அணியை பலப்படுத்தினார்.

127 பந்துகளை எதிர்கொண்டு 10 பௌண்டரிகளுடன் 125 ஓட்டங்களைப் பெற்ற அவர், இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார்.

மறுபுறத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மஹமதுல்லா 41 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் லக்‌ஷான்  சந்தகென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்ற, இசுரு உதான 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 247 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றம் காட்டிய நிலையில் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடும் உருவாகியிருந்தது. இதனால், இலங்கை அணிக்கு போட்டியின் வெற்றி இலக்கு 40 ஓவர்களுக்கு 245 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.

எனினும், மோசமான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 103 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனுஷ்க குணதிலக்க அதிகபட்சமாக 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு சார்பில், மெஹிதி ஹஸன் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும், சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீம் தெரிவாகியிருந்தார்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற ஆட்டக்கணக்கில் பங்களாதேஷ் தனதாக்கிக்கொண்டது.

இதனிடையே, இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) நடைபெறுகின்றது.