Photo:BCCI/IPL
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வருடம் தொடர்ச்சியாக அடைந்து வந்த தோல்விப் பயணத்துக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியுடனான இன்றைய ஆட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஒருவார காலம் வெற்றிக்காக ஏங்கிய சென்னை ரசிகர்களுக்கு இன்று நிம்மதி பெருமூச்சு கிடைத்தது.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சென்னை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஷேன் வொட்ஸனுக்கு பதிலாக பெப் டு பிலெசியுடன் ஷாம் கரன் களமிறங்கினார்.
ஆனால், சென்னை அணியின் இந்தத் தீர்மானம் ஏமாற்றத்திலேயே முடிந்தது. முதல் மற்றும் இரண்டாவது ஓவர்களை ஷாம் கரனே எதிர்கொண்டதுடன் அந்த 2 ஓவர்களிலும் 10 ஓட்டங்களே அணிக்கு கிடைத்தது.
மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே அதாவது பெப் டு பிலெசி தாம் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமின்றி நடையைக் கட்டினார். இது கடந்த ஆட்டங்களில் சிறப்பாக செயற்பட்ட ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியில் மாற்றத்தால் ஏற்படுத்தியதால் வந்தவினை என்றே விமர்கர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஷாம் கரனும் 31 ஓட்டங்ளடன் ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.4 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது. என்றாலும், ஷேன் வொட்ஸனும், அம்பாட்டி ராயுடுவும் பொறுமையுடன் களத்தில் நின்று சென்னை அணி 100 ஓட்டங்களைக் கடப்பதற்கு வழிசெய்தனர்.
ஷேன் வொட்ஸன் அம்பாட்டி ராயுடு ஜோடி நீண்ட நேரம் களத்தில் நின்றாலும் அவர்களால் அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. இவர்கள் 64 பந்துகளில் 81 ஓட்டங்களையே பகிர்ந்தனர். அம்பாட்டி ராயுடு 41 ஓட்டங்களையும், ஷேன் வொட்ஸன் 42 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர்.
அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியும், ரவிந்ர ஜடேஜாவும் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆறுதல் கொடுத்தனர். ஜடேஜா 25 ஓட்டங்களையும், தோனி 21 ஓட்டங்களையும் பெற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டுவேன் பிராவோ முதல் பந்திலேயே போல்டாகி ஏமாற்றமளித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றது.சந்தீப் சர்மா, கே.கே அஹமட், ரி.நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 168 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும் ஆரம்பம் சோகமாகவே இருந்தது.
அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தலைவர் டேவிட் வோனர் வெறும் 9 ஓட்டங்களுடன் களத்தைவிட்டு வெளியேறினார்.மணிஷ் பாண்ட்டே 4 ஓட்டங்களுடன் ரன்அவுட் ஆக, ஜொனி பெயார்ஸ்டோ 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். சன்ரைசஸ் அணி 9.5 ஓவர்களில் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து. அதன்படி அடுத்த 10 ஓவர்களில் கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு மேலும் 107 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இந்தத் தருணத்தில் நம்பிக்கை அளித்த கேன் வில்லியம்ஸன் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அரைச்சதம் கடந்தார். ஆனாலும், ஏனைய வீரர்கள் எவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை. அவசியமான நேரத்தில் பிரியம் கார்க், விஜய் சங்கர் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சன்ரைசஸ் அணியின் எதிர்பார்ப்புகளை சிதறடித்தனர்.
இதனால் பந்துகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போக பெற வேண்டிய ஓட்ட வேகம் உயர்ந்துகொண்டே போனது. 18 பந்துகளில் 46 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது 18 ஆவது ஓவரை வீசிய டுவேன் பிராவோவின் பந்துவீச்சில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டன.
வெற்றிக்காகப் போராடிய கேன் வில்லியம்ஸன் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சன்ரைசஸ் அணியின் எதிர்பார்ப்பு சுக்குநூறானது. ரஸிட் கான் 14 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
இறுதி ஓவரில் 22 ஓட்டங்கள் தேவைப்பட சன்ரைசஸ் அணியால் ஒரு விக்கெட்டை இழந்து ஓர் ஓட்டத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்படி சன்ரைசஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் கே.வி சர்மா, டுவேன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷாம் கரன், ஜடேஜா, தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இது இந்தமுறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற மூன்றாவது வெற்றியாகும். அத்துடன் இவ்வருட தொடரில் சன்ரைசஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு சென்னை அணி கொடுத்த பதிலடியாகவும் அமைந்தது.