July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுக்கு 2000 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறது பி.சி.சி.ஐ!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 2000 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி, மருத்துவ ஒக்ஸிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ஒக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது. இந்தச் சிக்கலை  சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில், பி.சி.சி.ஐ அமைப்பு 10 லீட்டர் கொள்ளளவுள்ள 2000 ஒக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பில் பேசிய பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 லீட்டர் 2000 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குகிறோம். கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் போராடும் இச்சூழலில் மருத்துவத்துறை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறது.

முன் களப் போராளிகளான அவர்கள், நம்மை பாதுகாப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். உடல்நலம், பாதுகாப்புக்கு பி.சி.சி.ஐ எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் நாங்களும் துணையாக நிற்க விரும்புகிறோம். தற்போது ஒக்ஸிஜன் மற்றும் இதர உபகரணங்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால், ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.

கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என நம்புகிறேன். தற்போதைய நிலையில் தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம். அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த சில மாதங்களில் பி.சி.சி.ஐ இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும், தேவையிருக்கும் இடத்திற்கு இதை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஷிகர் தவான், இர்பான் பதான், பாண்ட்யா சகோதரர்கள் போன்ற கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.