November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவல்: 2021 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை  உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

இதன்படி 15 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் நடக்க இருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி இந்த ஆண்டில் (2021) ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் ஆசிய கிண்ண தொடரை நடத்த வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்குரிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகளுக்கு இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் ஆசிய கிண்ணத்தை நடத்த சாத்தியம் இல்லை.

அதன் பிறகு 2022 ஆம் ஆண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இருப்பதால் 2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிய கிண்ண கிரிக்கெட் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே நடத்த வாய்ப்பு இருப்பதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக 2018 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.