July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வனிந்துவின் துணிச்சலான ஆட்டம் வீண்: முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 33 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்தது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என அந்த அணி முன்னிலை பெற்றது.

டாக்காவின் மிர்பூரில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் தமிம் இக்பால் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் சிறிய தடுமாற்றத்தினை காட்டிய போதும் அணித்தலைவர் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லா ரியாத் ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை குவித்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது 40ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹீம், 87 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 84 ஓட்டங்களை எடுக்க, தமிம் இக்பால் 54 ஓட்டங்களையும், மஹமதுல்லா ரியாத் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பங்களாதேஷ் அணி சார்பில் சர்வதேச போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக தமிம் இக்பால் புதிய மைல்கல்லை எட்டினார்.

இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் தனஞ்சய டி சில்வா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில், 258 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் சுழல்பந்து வீச்சுக்கு தடுமாறி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியை  தழுவியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் முன்வரிசை வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் கொடுத்தாலும், தனியொருவராக போராடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்ட வனிந்து ஹஸரங்க 60 பந்துகளில் தன்னுடைய இரண்டாவது ஒருநாள் அரைச்சதத்துடன் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதில் இலங்கையின் வெற்றிக்காக வனிந்து ஹஸரங்க டி சில்வாவும் இசுறு உதானவும் கடைசி நேரத்தில் கடுமையாக முயற்சித்தபோதிலும் அது கைகூடாமல் போனது.

இவர்கள் இருவரும் 8 ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் மெஹிதி ஹஸன் மீராஸ் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், முஸ்தபிசூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் சயிபுத்தீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, 33 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை அணி, ஐ.சி.சி இன் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் எந்தவொரு புள்ளிகளையும் பெறாமல் கடைசி இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.

போட்டியின் ஆட்ட நாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவாகினார்.

இதனிடையே, இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவுள்ளது.