October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சக வீரரை கொலை செய்த வழக்கு: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது!

கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் இரண்டு தடவைகள் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் கனிஷ்ட தேசிய சம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சாகர் ராணா கடுமையாக தாக்கப்பட்டார்.

பலத்த காயமடைந்த அவரை, அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து சாகர் ராணாவின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். இதில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட சிலரை பொலிஸார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார்.

இதனால் குறித்த வழக்கை பொலிஸார் கொலை வழக்காக மாற்றினர். சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வந்ததால், அவர் இருக்கும் இடத்தை பொஸிசார் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர்.

இதனையடுத்து சுஷில் குமார் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டெல்லி பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பரை டெல்லியின் முந்த்கா எனும் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதாகும் சுஷில் குமார் இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்றவர். 2008 இல் பீஜிங்கில் வெண்கலப் பதக்கமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

சுதந்திரத்திற்கு பிறகு இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சுஷில் குமார் இருந்து வருகிறார்.

ஒலிம்பிக் பதக்கங்கள் மட்டுமல்லாது, 2010 உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம், பொதுநலவாய போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம், பொதுநலவாய சம்பியன்ஷிப்பில் 5 தங்கம் என சர்வதேச அளவில் இந்தியாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் சுஷில் குமார்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2009 இல் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இப்படி புகழின் உச்சியில் இருந்த சுஷில் குமார் தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.