November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் சுப்பர் லீக்கை அபுதாபியில் நடத்த அனுமதி அளித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 தொடரின் எஞ்சிய போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி கராச்சியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், கடந்த வாரம் மேலும் நான்கு வீரர்கள் மற்றும் ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

எனவே, கொரோனா பரவல் எதிரொலியாக முன்னணி வெளிநாட்டு வீரர்கள் சிலர் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாக பாகிஸ்தான் சுப்பர் லீக்கை தள்ளி வைப்பதாக அறிவித்தது.

இந்த வருட பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 34 போட்டிகளில் 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த வேண்டும் என அணி உரிமையாளர்கள் அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை மற்றும் அந்த நாட்டு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் ஒத்திவைக்கப்பட்ட 6 ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 போட்டி அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எஞ்சியுள்ள 20 போட்டிகளும் ஜுன் 5 ஆம் திகதி நடைபெறும் என  பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள நிலையில், விரைவில் இதற்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.