பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு ஷிரான் பெர்னாண்டோவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் பயணித்த
சகலதுறை வீரர் இசுரு உதான, இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ மற்றும் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ் ஆகிய மூவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து, இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரண்டாவது பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, வேகப்பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுக்கு மாத்திரம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பங்களாதேஷ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட உத்தேச குழாத்தில் இடம்பிடித்த தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன ஆகிய இருவரும் கொரேனா வைரஸினால் பாதிக்கப்படனர்.
இதனையடுத்து குறித்த இரண்டு வீரர்களையும இலங்கை அணி குழாத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தேசிய அணியின் பிரதானியுமான காலீத் மஹ்முத்திற்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு எதிர்மறையான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்கா நகரில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.