January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்’

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும்  திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக ஒரு வருடங்கள் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 23 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழா தொடர்பாக நடைபெற்ற மூன்று நாள் மெய்நிகர் கூட்டத்தின் முடிவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி) பிரதி தலைவர் ஜோன் கோட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் பெரும்பகுதி கொரோனா தொற்று பரவலின் நான்காவது அலை காரணமாக அவசரகால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படுவதை 80 சத வீதத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் எதிர்ப்பதாக திங்களன்று வெளியான புதிய கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் ஒலிம்பிக் விளையாட்டு விழா இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மேலும் ஒத்திவைக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், விளையாட்டு வீரர்களை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவது உட்பட தொற்று நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாலும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை விதிப்பதாலும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பாதுகாப்பாக நடத்த முடியும் என ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது.

மோசமான சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு தாம் ஏற்கனவே ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஏற்பாட்டு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பிரதித் தலைவர் ஜோன் கோட்ஸ், ஒலிம்பிக் தொடங்கும் ஜூலை 23 க்கு முன்னதாக ஒலிம்பிக் நடைபெறவுள்ள டோக்கியோவில் வசிப்பவர்களில் 80% க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு குழுவுடனும் மருத்துவ குழு ஒன்றும் இணைத்துக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரு நாளைக்கு 230 மருத்துவர்கள் மற்றும் 300 தாதியர்களை சேலையில் இணைத்துக்கொள்ளப்பட இருப்பதாகவும் தினமும் சுமார் 50,000-60,000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதால் விளையாட்டு போட்டியை நடத்த பொது மக்கள் விரும்புவார்கள் என தாம் நம்புவதாக கோட்ஸ் கூறியுள்ளார். எனினும் ஜப்பான் இதுவரை அதன் மக்கள் தொகையில் வெறும் 4.1% மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.