July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா எதிரொலி: டி-20 உலகக் கிண்ணம் தொடர்பில் ஜூன் முதலாம் திகதி இறுதி முடிவு!

இந்தியாவில் டி-20 உலகக் கிண்ண தொடரை நடத்தலாமா அல்லது கைவிடலாமா என்பது குறித்த இறுதி முடிவு ஜூன் முதலாம் திகதி எடுக்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட, பலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடரில், கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன்முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு அடுத்தடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், இதர கொல்கத்தா வீரர்கள் என்று அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பரவ, மறு திகதி குறிப்பிடாமல் ஐ.பி.எல் தொடரை ஒத்திவைப்பதற்கு பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுத்தது.

மீண்டும் ஐ.பி.எல் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில், இந்தியாவில் உலக கிண்ண டி-20 தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உலகக் கிண்ண டி-20 தொடர், எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய இந்தத் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக, 2021 இல் இந்தியாவில் நடைபெறும் என்று ஐ.சி.சி ஒத்திவைத்தது. ஆனால், இந்தியாவில் தற்போது நிலவும் மோசமான சூழலில் எந்தவொரு விளையாட்டையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக் கிண்ணத்தை இந்தியாவில் நடத்துவது குறித்து ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்தியாவில் நடத்த முடியாவிட்டால், வேறு எந்த நாட்டிலாவது நடத்த வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணத் தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்ட சூழலில், டி-20 உலகக் கிண்ணத் தொடரின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே 29 ஆம் திகதி, பி.சி.சி.ஐ இன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், டி-20 உலக கிண்ணத்தை நடத்துவது தீவிரமாக ஆலோசிக்கப்படவுள்ளதுடன், பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

அன்றைய தினம் பி.சி.சி.ஐ எடுக்கும் முடிவுகள், ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் கூட்டத்தில் அறிவிக்கப்படும். அதனைப் பொறுத்தே இறுதி முடிவுகள் தெரியவரும்.

இதேநேரம், இந்தியாவில் உலகக் கிண்ணத்தை நடத்த முடியாமல் போனால் குறித்த காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உலக கிண்ணத்தை நடத்துவதற்கு ஐ.சி.சி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.