January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் இரட்டிப்பு கொடுப்பனவு!

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழங்கப்படுகின்ற கொடுப்பனவில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் 32 வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 24 வீரர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்துகின்ற திறமைகளுக்கு அமைய அவர்களுக்கான கொடுப்பனவும் முதல்தடவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, டெஸ்ட் போட்டியொன்றில் வீரரொருவருக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவை 7500 அமெரிக்க டொலர்களால் (15 இலட்சம் ரூபா) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் டெஸ்ட் போட்டிகளுக்காக 7 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான போட்டி கட்டணத்தில் எந்தவொரு மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஒருநாள், டி-20 தொடர்களுக்கு முறையே 5 ஆயிரம் மற்றும் 4 ஆயிரம் டொலர்கள் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இதற்குமுன் இருந்த ஒப்பந்தத்துக்கு அமைய டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகளை வீழ்த்தினால் அந்தப் போட்டியில் விளையாடிய வீரருக்கு 25 ஆயிரம் டொலர்கள் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், புதிய ஒப்பந்தத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியை வீழ்த்தினால் மாத்திரம் 150,000 டொலர்கள் (3 கோடி ரூபா) கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

இதில் இரண்டாவது இடத்தில் உள்ள அணியை தோற்கடித்தால் 125,000 டொலர்களும், மூன்றாவது இடத்தில் உள்ள அணியை தோற்கடித்தால் 100,000 டொலர்களும் மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஒருநாள் போட்டியில் முதலிடத்தில் உள்ள அணிக்கெதிராக தொடர் வெற்றியை பதிவு செய்தால் அணியில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும் 75,000 டொலர்கள் கொடுப்பனவாக வழங்கப்படும்.

2 ஆவது இடத்தில் உள்ள அணியை வீழ்த்தினால் 62,500 டொலர்களும், 3 ஆவது இடத்தில் உள்ள அணியை வீழ்த்தினால் 50,000 டொலர்களும், 4ஆவது இடத்தில் உள்ள அணியை வீழ்த்தினால் 40,000 டொலர்களும், 5ஆவது இடத்தில் உள்ள அணியை வீழ்த்தினால் 30,000 டொலர்களும் கிடைக்கும்.

இதேவேளை, கடந்த காலங்களில் டி-20 போட்டிகளில் வெற்றிபெற்றால் எந்தவிதமான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்றாலும் இம்முறை ஒப்பந்தத்தில் கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணிக்கெதிராக தொடர் வெற்றியை பெற்று கொண்டால் 50,000 டொலர்களும், 2ஆவது இடத்தில் உள்ள அணியை வென்றால் 42,500 டொலர்களும், 3 ஆவது இடத்தில் உள்ள அணியை வென்றால், 35,000 டொலர்களும், 4 ஆவது இடத்தில் உள்ள அணியை வென்றால் 30,000 டொலர்களும், 5 ஆவது இடத்தில் உள்ள அணியை வென்றால் 20,000 டொலர்களும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றிகொண்டால், அணியில் இடம்பெற்றுள்ள வீரரொருவருக்கு 750,000 அமெரிக்க டொலர்கள் (15 கோடி ரூபா) மேலதிக கொடுப்பனவாக வழங்கப்படும்.

இதன் அரையிறுதிப் போட்டி வரை வந்தால் 7 கோடியும் (350,000 டொலர்கள்), காலிறுதிப் போட்டி வரை வந்தால் 5 கோடியும் (250,000 டொலர்கள்), உலகக் கிண்ணத்தில் பங்குபற்றினால் மாத்திரம் 6 கோடியும் (300,000 டொலர்கள்), மேலதிக கொடுப்பனவாக வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, 2021/2022 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான புதிய ஒப்பந்தத்துக்கு கையெழுத்திடும் இறுதித் திகதி (20.05.2021) நேற்றாகும்.

எனினும், தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 24 பேரில் 18 வீரர்கள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ளதால் அவர்கள் நாடு திரும்பியதும் ஒப்பந்தத்தை வாசித்துப் பார்த்து கையெழுத்திடலாம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.