Photo – ACC facebook
இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பிற்போடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குவது மேலும் கடினம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஏஷ்லி டி சில்வா, ஜூன் மாதத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போதைய சூழலில் பல நாடுகள் வெளிநாட்டு பயணத்தை அனுமதிப்பதில்லை. அனைத்து நாடுகளும் மிகவும் இறுக்கமான கால அட்டவணையில் உள்ளன. எனவே, இந்த அட்டவணைகளின் படி, ஒவ்வொரு அணியும் பங்கேற்கக்கூடிய, காலத்தை அறிவிப்பது கடினம்.
ஆனால், டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் ஆசிய கிண்ண தொடரை நடத்த முடியும் என நம்புகிறோம். ஆசிய கிரிக்கெட் பேரவை போட்டி நடைபெறும் திகதியை உறுதி செய்தவுடன் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.