January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவானார்

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா, போட்டியின்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கே. மதிவாணன், மொஹான் டி சில்வா மற்றும் ஜயந்த தர்மதாச ஆகியோர் தமது வேட்பு மனுவை மீளப் பெற்றதையடுத்து, ஷம்மி சில்வா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் சபையின் 2021 – 2023 காலப்பகுதிக்கான நிர்வாகக் குழுவை தெரிவு செய்வதற்கான தேர்தல் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக  இன்று காலை இடம்பெற்றது.

முன்னதாக ஷம்மி சில்வா தரப்பினரும், கே. மதிவாணன் தரப்பினரும் இம்முறை கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

எனினும், பிரதான வேட்பாளர்களான கே. மதிவாணன், மொஹான் டி சில்வா மற்றும் ஜயந்த தர்மதாச ஆகியோர் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழுவுக்கு எழுத்துமூலம் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக தேர்தலில்  ஷம்மி சில்வா உள்ளிட்ட தரப்பினர் மீண்டும் போட்டியின்றி ஏகமனதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவாகினர்.

இதன்படி, இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஷம்மி சில்வா, இரண்டாவது தடவையாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, 2004இல் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலில் அப்போதைய தலைவராக இருந்த மொஹான் டி சில்வா, போட்டியின்றி ஏகமனதாக தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு ஷம்மி சில்வா போட்டியின்றி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக மீண்டும் தெரிவாகியமையிட்டு ஷம்மி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டின் அபிவிருத்திக்காக எனது தலைமையிலான முன்னாள் நிர்வாகம் முன்னெடுத்திருந்த அதிசிறப்புமிக்க சேவைகளை எமக்காக வாக்களித்தவர்கள் நன்கு புரிந்துகொண்டமை இந்த தேர்தல் முடிவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.