November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதிலடி கொடுக்குமா சென்னை?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்

Photo: BCCI/IPL

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

சென்னை ரசிகர்கள் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆட்டம் நடைபெறுகின்றமை மீண்டும் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் 2010,2011,2018 ஆகிய மூன்று தடவைகள் சாம்பியனாகியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வருடம் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தினாலும் அதன் பிறகு 6 ஆட்டங்களில் பங்கு பற்றிய அவர்களால் ஒரு வெற்றியை மாத்திரமே பெறமுடிந்தது.

அதன்படி சென்னை அணி 7 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மாத்திரம் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் ஏழாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் சுற்று ஆரம்பமாகியுள்ளதுடன் இந்த சுற்றில் 5 ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மாத்திரமே சென்னை அணியால் பிளேஓவ் சுற்றுக்குத் தகுதிபெறமுடியும்.

ஆனால்,தற்போதைய நிலையில் அது கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னை அணியின் விளையாட்டுத் திறன் அந்தளவுக்கு மங்கிப் போயுள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பெப் டு பிலெசியும்,ஷேன் வொட்ஸனும் மாத்திரமே நம்பிக்கை அளிக்கிறார்கள். அணித்தலைவர் தோனியின் முன்னைய துணிச்சலான ஆட்டத்தை இதுவரை காண முடியவில்லை.

அவர் முயற்சித்தாலும் அவரது உடல் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லையோ என்ற சந்தேகமே தற்போது எழுகின்றது.

மத்திய வரிசையில் கேதர் யாதவ் பல ஆட்டங்களிலும் சொதப்பலாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற கூடிய ஆட்டங்களில் கூட தோல்வியடைய வைத்தார்.

இதனால் அவருக்கு பதிலாக சென்னை அணிமாற்று வீரருடன் களமிறங்குமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

Photo: BCCI/IPL

அம்பாட்டி ராயுடு, டுவேன் பிராவோ,ஷாம் கரன்,ரவிந்ர ஜடேஜா எனஓட்டங்களைக் குவிக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் அவர்கள் எவருமே கடந்த ஆட்டங்களில் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை.

எனவே, இவர்கள் இன்றையதினம் பிரகாசித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவெற்றி மீது நம்பிக்கை வைக்க முடியும்.

தீபக் சஹார்,ரவிந்ர ஜடேஜா,டுவேன் பிராவோ ஆகியோர் பந்து வீச்சில் ஓரளவுக்கு கைகொடுக்கின்றனர். இவர்களுடன் ஷாம் கரன், சர்துல் தாகூர் ஆகியோரும் ஒத்துழைத்தால் எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடியும்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை அவர்களும் அணித் தலைவர் டேவிட் வோனரையே மலைபோல நம்பியுள்ளனர்.

வோனர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தால் ஹைதராபாத் அணியின் நிலைமை அதோகதிதான்.

என்றாலும், ஜொனிபெயார்ஸ்டோ, கேன் வில்லியம்ஸன், மணிஷ் பாண்ட்டே ஆகிய வலுவான துடுப்பாட்ட வீரர்களையும் ஹைதராபாத் அணி தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனாலும், அவர்கள் கடந்த போட்டிகளில் பிரகாசிக்காததே அணிக்கு பின்னடைவாக உள்ளது. இவர்கள் பொறுப்புகளை நிறைவேற்றினால் ஹைதராபாத ;வெற்றி பெறுவது அவ்வளவு கடினமாகாது.

நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான ரஷீட் கான், நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினாலும் ஏனைய வீரர்கள் மந்தமாகப் பந்துவீசி ஓட்டங்களையும் விட்டுக்கொடுக்கின்றனர். இந்தத் தவறை திருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி உள்ளது.

Photo: BCCI/IPL

இத்தொடரில் 3 வெற்றிகளை பெற்றுள்ள ஹைதராபாத் அணி சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றமை கூடுதல் பலமாகும்.

அந்தத் தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா அல்லது மீண்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுமா எனும் கேள்விக்கு இன்றிரவு பதில் கிடைக்கும்.

இவ்விரண்டு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளதுடன் அவற்றில் சென்னை 10 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன.