January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் விளையாட வரமாட்டார்”; தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவிப்பு!

Photo: Cricket South Africa

இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஏபி டிவிலியர்ஸ் விளையாட மாட்டார் என்று தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் டி-20 உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் வீரர்களை தயார் செய்து வருகிறது.

டி-20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் தென்னாபிரிக்கா அணியும் உலகக் கிண்ண தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் டி-20 கிரிக்கெட்டின் அதிரடி நாயகனான ஏபி டிவிலியர்ஸை மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ள அணி நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஏபி டிவிலியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூக வலைத்தளம் வழியாக அறிவித்தார்.

எது எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் தான் பங்கேற்க விரும்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போதைய தென்னாபிரிக்கா அணி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு உலகின் பல்வேறு டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் டிவிலியர்ஸை மீண்டும் தென்னாபிரிக்கா அணியில் இடம்பெற வைத்து, இந்த வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் இவ்வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது டிவிலியர்ஸ் அளித்த பேட்டியில், தென்னாபிரிக்கா தலைமைப் பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் ஐ.பி.எல் தொடர் முடிந்தபின் பேசுவேன். என்னுடைய உடற்தகுதி, துடுப்பாட்ட போர்ம் ஆகியவற்றை ஆய்வு செய்து, இவ்வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடுவது குறித்து பேசுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதனால், தென்னாபிரிக்கா அணிக்காக மீண்டும் டிவிலியர்ஸ் விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை  டிவிலியர்ஸின் மீள்வருகை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது,

தென்னாபிரிக்கா அணிக்குள் ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் விளையாடுவது குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினோம். அந்த ஆலோசனையின் முடிவில், தான் ஓய்வு பெற்றுவிட்டது என்பது இறுதியான முடிவு. அதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. மீண்டும் தேசிய அணிக்கு வரும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் டிவிலியர்ஸ் தென்னாபிரிக்கா அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.