July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!

Photo: Cricket Australia Twitter

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இதன்படி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தத் தொடர் நடைபெறும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை 2021/2022 பருவ காலத்தில் சொந்த மண்ணில் விளையாடவுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி ஆஷஸ் கிண்ணம் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் அவுஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.

அதன்பிறகு இலங்கைக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியா விளையாடுகிறது.

இந்த தொடரின் முதலாவது போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சிட்னியில் நடைபெறும்.

இரண்டாவது போட்டி 13 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 15 ஆம் திகதியும், நான்காவது போட்டி 18 ஆம் திகதியும், இறுதி டி-20 போட்டி 20ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிகள் அனைத்தும் முறையே தி கெப்பா, மெட்ரிகன், அடிலெய்ட் ஓவல் மற்றும் மெல்போர்ன் ஆகிய கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

எனவே, சர்வதேச டி-20 போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி பங்குபற்றுகின்ற அதிக போட்டிகள் கொண்ட டி-20 தொடர் இதுவாகும்.

இறுதியாக இலங்கை அணி 2019 இல் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியதுடன், இந்தத் தொடரை 3 க்கு 0 என அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணி தற்போது பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த தொடரையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்காக இங்கிலாந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.