February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய குழாம்களில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸிலிருந்து வீரர்களை பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளதாக விளையாட்டு துறை பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி அமல் எதிரிசூரிய தெரிவித்தார்.

இதன்படி, தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய குழாம்களில் இடம்பெற்றுள்ள வீரர்களையும், முன்னதாக கலைக்கப்பட்ட தேசிய குழாம்களில் இடம்பிடித்திருந்த வீரர்களையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வரவழைத்து ஒரே நாளில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலையீட்டினால் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவ்வாறு முதல் கட்ட டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி எதிர்வரும் 25 ஆம் திகதி நாரஹேன்பிட்டியவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து செலுத்துவதற்கு தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் கடந்த வாரம் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன், அதன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பியதும் வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கைக்கான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முழு உலகத்திலும் இதுவரை 75 சதவீதமான விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.