இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த மூன்று பிரதான வேட்பாளர்களான கே. மதிவாணன், பந்துவல வர்ணபுர, நிஷான்த ரணதுங்க ஆகிய மூவரும் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை கிரிக்கெட் தேர்தல் குழுவுக்கு எழுத்துமூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த மூன்று வேட்பாளர்களும் இலங்கை கிரிக்கெட் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தேர்தலிலிருந்து வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான கே. மதிவாணன் தலைவர் பதவிக்கும், இலங்கையின் முன்னாள் வீரரான பந்துல வர்ணபுர உதவித் தலைவர் பதவிக்கும், முன்னாள் வீரர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரரான நிஷான்த ரணதுங்க செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவதற்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதற்கான முக்கிய காரணமாக, விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவொரு பலனும் கிடைக்கப் போவதில்லை எனவும், தமது தரப்பினரின் தோல்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த மூவரும் தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுள்ளதால் கடந்த தவணையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக பதவி வகித்த ஷம்மி சில்வா தலைமையிலான குழுவினர், இம் மாதம் 20ஆம் திகதி சூம் இணையவழியில் நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் தலைவர் பதவிக்கு ஏகமனதாக மேலும் இரண்டு வருடங்களுக்கு தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.