October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிரடி காட்டினார் டி விலியர்ஸ்; வெற்றியை பறித்தது பெங்களூர்!

BCCI/IPL

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசித்த பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் தனது ஐந்தாவது வெற்றியை சுவீகரித்தது. ஆட்டத்தில் கொல்கத்தாவை 92 ஓட்டங்களால் பெங்களுர் அணி தோற்கடித்தது.


சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணித்தலைவர் விராத் கோஹ்லி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதன்படி களமிறங்கிய ஏரோன் பிஞ்ச் மற்றும் டெவ்டட் படிக்கால் ஜோடி, முதல் விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களைப் பகிர்ந்தது. டெவ்டட் படிக்கால் 32 ஓட்டங்களுடனும், ஏரோன் பிஞ்ச் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.


ஆனால், அதன் பிறகு இணைந்த அணித்தலைவர் விராத் கோஹ்லி – ஏபி டி விலியர்ஸின் அபார துடுப்பாட்டத்தில் பெங்களுர் அணியின் கைமோலோங்கியது. குறிப்பாக டி விலியர்ஸின் அதிரடி ஆட்டம் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை திக்குமுக்காட வைத்தது.

BCCI/IPL

டி விலியர்சும் கோஹ்லியும் வீழ்த்தப்படாத மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 46 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா அணியை துவம்சம் செய்தனர்.
டி விலியர்ஸின் துடுப்பில் பட்ட பந்துகள் நலாபக்கமும் சிதறித் தெறிக்க கொல்கத்தா அணி வீரர்கள் செய்வதறியாது திகைத்தனர். பெங்களுர் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களைக் குவித்தது.


33 பந்துகளை எதிர்கொண்ட டிவிலியர்ஸ் 6 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி பொறுமையாக ஆடிய விராத் கோஹ்லி 33 ஓட்டங்களைப் பெற்றார்.

கொல்கத்தா அணியின் நான்கு பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9 மேற்பட்ட ஓட்ட சராசரியை விட்டுக்கொடுத்து ஓட்டங்களை வாரி வழங்கினார்கள்.
195 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி பந்துவீச்சைப் போன்றே துடுப்பாட்டத்திலும் சொதப்பலாக செயற்பட்டது. சுப்மன் கில் பெற்ற 34 ஓட்டங்களே அணி சார்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.

BCCI/IPL


இயோர்ன் மோர்கன், அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் போன்ற நட்சத்திர வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி தட்டுத் தடுமாறி 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் அவர்களால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.


கிறிஸ் மொரிஸ், வொஸிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தனது ஏழாவது ஆட்டத்தில் வெற்றிபெற்ற பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்து 10 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தை அடைந்தது.