July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகிறார் குமார் சங்கக்கார!

Photo: Rajasthan Royals Twitter

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ரெட்’ (The Hundred)  கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார வர்ணனையாளராக செயல்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை இணைந்து தி ஹண்ரெட் என்னும் புதிய வடிவிலான கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் நடைபெறவிருந்த இத்தொடர் கொரோனா வைரஸினால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதுமாத்திரமன்றி, ஆண்களை போல பெண்கள் பங்கேற்கும் தி ஹண்ரட் தொடரும் நடைபெறவுள்ளது.

8 அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் அணிக்கு மொத்தம் 100 பந்துகள் வீசப்படும். இதில் மொத்தம் 68 போட்டிகள் நடைபெறுகின்றன.இதில் 34 போட்டிகள் ஆண்களுக்காகவும், 34 போட்டிகள் பெண்களுக்காகவும் நடைபெறவுள்ளன.

இத்தொடரினை Sky Sports தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவுள்ளதுடன், இதில் வர்ணனையாளர்களாக யார் யார் செயல்பட உள்ளனர் என்பது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்ணனையாளர்கள் குழுவில் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2019 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் வர்ணனையாளராக சங்கக்கார செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான அன்ட்ரூ பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் ப்ரோட், டேரன் சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் வர்ணனையாளர்களாக இணைந்து கொள்ளவுள்ளனர்.

அதேபோல, பாகிஸ்தானின் வசீம் அக்ரம், இந்தியாவின் தினேஷ் கார்த்திக், அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் மெல் ஜோன்ஸ், இவர்களுடன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நிரந்தர வர்ணனையாளர்களான நாசர் ஹுசைன், எபோனி ரெய்ன்போர்ட், ரொப் கீ, டேவிட் லோய்ட், மைக்கல் ஆர்த்தர்டன், மார்க் பச்சர் ஆகியோரும் உள்ளனர்.

இதேவேளை, அங்குரார்ப்பண தி ஹண்ரெட் தொடரில் இலங்கை முன்னாள் வீரரான மஹேல ஜயவர்தன, சொதர்ன் பிரேவ் அணியின் பயிற்சியாளராக செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்