இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம் தொடர்பாக வீரர்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையே முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாமதப்படுத்துகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் வீரர்கள் காட்டிய திறமையினை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தமது ஒப்பந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.
அதனடிப்படையில் வீரர்கள் A,B,C,D ஆகிய 4 வகையான தரநிலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.அதிலும் குறிப்பாக ‘யு’ ஒப்பந்த தரநிலை பெறும் வீரர்களும் அதிலேயே A1, A2, A3, A4 எனும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், 2021/2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை கிரிக்கெட் சமர்ப்பித்த ஒப்பந்தத்தில் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமல் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரின் ஒப்பந்தங்கள் 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, இதற்கு முந்தைய ஒப்பந்தத்துடன் ஒப்பிடுகையில் ஒரு வீரரின் ஊதியத்தில் இருந்து கிட்டத்தட்ட 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இலங்கை அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உடற்தகுதி, தொழில்முறை கிரிக்கெட்டில் திறமை, தலைமைத்துவ குணங்கள் மற்றும் எதிர்கால மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இம்முறை வீரர்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், குறித்த ஒப்பந்தத்தில் 24 வீரர்கள் அடங்குவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த 24 வீரர்களுக்கும் A, B, C மற்றும் D பிரிவுகளின் கீழ் 25,000 அமெரிக்க டொலர் முதல் 100,000 வரை வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதிலே அதிக தொகை சம்பளமாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனன்ஜய சில்வா ஆகியோர் A1 தர நிலையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர் (அண்ணளவாக இலங்கை மதிப்பில் 2 கோடி )
ஒப்பந்தம் பெறும் வீரர்கள் விபரம்: தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, அஞ்சலோ மெத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மல், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, லசித் எம்புல்தெனிய, பெத்தும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மன்த சமீர, கசுன் ராஜித, தினேஷ் சந்திமால், லக்ஷான் சந்தகென், விஷ்வ பெர்னாண்டோ, இசுரு உதான, ஓசத பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, தனுஷ்க குணதிலக்க, அஷேன் பண்டார மற்றும் அகில தனன்ஜய.