July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடர்;தலைவர் பதவிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா இடையே போட்டி

இலங்கையில் ஜுலை மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான இந்திய அணியின் தலைவர் பதவிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா இடையே போட்டி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அனைத்தையும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த தொடர் நடைபெறும் காலப்பகுதியில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, மொஹமட் ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், மொஹமட் சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் இலங்கை சுற்றுப்பயணத்தில் இரண்டாம் நிலை இந்திய அணியே விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பிரித்வி ஷா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், தேவ்தத் படிக்கல், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திவாடியா உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையுடனான தொடரில் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ இன் உயர் அதிகாரியொருவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிடுகையில்,

ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்துக்கு சத்திர சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தான் தலைவராக நியமிக்கப்படுவார். ஆனால் இலங்கை தொடருக்குள் அவர் முழு உடல்தகுதியை பெற்றுவிடுவாரா? என்பதில் உறுதி இல்லை.

எனவே தற்போது தலைவர் பதவிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், சகலதுறை வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையே தான் போட்டி காணப்படுகிறது.

தவான் கடந்த இரண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது இடைநடுவில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 380 ஓட்டங்களை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

அது மட்டுமன்றி தற்போதைய அணி தேர்வில் உள்ள வீரர்களில் சிரேஷ்ட வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே தலைவராக நியமிக்கப்பட அவருக்கு தான் வாய்ப்பு அதிகம்.

இதனிடையே, 27 வயதான ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பணிச்சுமையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக அவர் பந்து வீசுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிய போது ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.

ஆனாலும் அவர் துடுப்பாட்டத்தில் தனிநபராக வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடியவர். அதனால் அவரை தலைவர் பதவிக்கான வாய்ப்பில் இருந்து ஒதுக்கி விட முடியாது. தலைவர் பதவி வழங்கினால் அவரது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படலாம் என தெரிவித்தார்.