November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் ஒருநாள் தொடர்: குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணி விபரம் வெளியாகியது!

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த குழாமிற்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, திமுத் கருணாரத்ன ஒருநாள் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இலங்கை ஒருநாள் அணியின் புதிய அணித்தலைவராக குசல் ஜனித் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறிது காலம் ஓய்வு வழங்கப்பட்ட குசல் மெண்டிஸ் மீண்டும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அணியின் உப தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய டி-20 அணித்தலைவரான தசுன் ஷானகவும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கழக மட்ட ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்த வேகப் பந்து வீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

உபாதையிலிருந்து குணமடைந்துள்ள அனுப வேகப் பந்து வீச்சாளர் இசுரு உதான பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், துஷ்மந்த சமீர மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், லக்‌ஷான் சந்தகன், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் அகில தனன்ஜய ஆகிய மூவரும் சுழல் பந்துவீச்சாளராக இடம்பிடித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், திசர பெரேரா ஓய்வை அறிவித்திருக்கும் அதேநேரம், சுரங்க லக்மாலும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, ஐ.சி.சி இன் சுப்பர் லீக் தொடரின் ஓர் அங்கமாக 3 ஒருநாள்  போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை குழாம் எதிர்வரும் 16 ஆம் திகதி பங்களாதேஷ் பயணமாகவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 25 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி 28 ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றன.

இலங்கை குழாம் விபரம் – குசல் ஜனித் பெரேரா – தலைவர், குசல் மெண்டிஸ் – உப தலைவர், தனுஷ்க குணதிலக. தனன்ஜய டி சில்வா, பெத்தும் நிசங்க. தசுன் ஷானக, அசேன் பண்டார, வனிந்து ஹசரங்க, இசுரு உதான, அகில தனஞ்சய. நிரோஷன் டிக்வெல்ல, துஷ்மந்த சமீர, ரமேஷ் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, லக்‌ஷான் சந்தகென், சாமிக்க கருணாரத்ன. பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ.