February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பராலிம்பிக் படகோட்டப் போட்டியில் முதல் இலங்கை வீரராக களமிறங்கும் மகேஷ் ஜயகொடி தகுதி பெற்றார்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் இடம்பெறவுள்ள பராலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை வீரர் மகேஷ் ஜயகொடி பெற்றுள்ளார்.

மேற்படி போட்டிகளில் விசேட தேவையுடைய ஆண்களுக்கான தனிநபர் துடுப்பு படகோட்ட போட்டிக்கு அவர் நேரடியாக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய-ஓசியானா மண்டல துடுப்பு படகோட்டத்தின் தகுதி சுற்றுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 7 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது.

இதில் ஆண்களுக்கான PRI தனிநபர் ஸ்கல்ஸ் பிரிவில் இலங்கையின் மகேஷ் ஜயகொடி முதலிடத்தைப் பெற்று, டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 11 நிமிடங்கள் 04.23 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதன்மூலம், பராலிம்பிக் துடுப்பு படகோட்டப் போட்டிக்கு தகுதிபெற்ற முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் மகேஷ் ஜயகொடி பெற்றுக்கொண்டார்.

முன்னதாக 2019 இல் நடைபெற்ற ஆசிய பராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் எகென்பர்திவ் இரண்டாவது இடத்தையும், தாய்லாந்து வீரர் பி. கொமினுஜன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே, பெண்களுக்கான இதே போட்டிப் பிரிவில் 2 ஆவது இடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை சமிதா சமன்மலி பராலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். இந்தப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை டொமோமி முதலிடத்தைப் பெற்று அசத்தினார்.

முன்னதாக, 2019 இல் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பராலிம்பிக் விளையாட்டு விழாவில் சமிதா சமன்மலி பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

எனவே, மகேஷ் ஜயகொடியின் வெற்றியுடன் இம்முறை டோக்கியோ பராலிம்பிக்குக்கு நான்கு இலங்கை வீரர்கள் தகுதி பெற்று கொண்டனர்.

இதில் தினேஷ் பிரியன்த (ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F-46), சமித துலான் (ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்-44), சம்பத் பண்டார (அம்பு எறிதல் F-46) ஆகிய வீரர்கள் முன்னதாக டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், இம்முறை டோக்கியோ பராலிம்பிக்கில் குறைந்தபட்சம் ஏழு வீரர்களை பங்கேற்க செய்வதற்கு இலங்கை பராலிம்பிக் சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.