January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.  இதனால் இந்திய பிரஜைகள் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், அஜிங்கியா ரஹானே, உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தற்போது இந்திய அணித் தலைவர் விராத் கோலி டெல்லியில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பிறகு, வீடு திரும்பிய விராட் கோலி கொரோனா வைரஸுக்கு எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளார்.

இதன்படி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி கொரோனா நிவாரண நிதி திரட்டினார். இதன் முதல்கட்டமாக 2 கோடி ரூபாயை அவர்கள் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களும் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவர்கள் கேட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் 3.6 கோடி நன்கொடையாக  கிடைத்தது. இதற்காகவும் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளனர்.