October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன விடுதலை!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ECB), முன்வைத்திருந்த இரண்டு விதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏகமனதாக நீக்குவதாக ஐ.சி.சி.யின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டி-10 கிரிக்கெட் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து அவிஷ்க குணவர்தனவுக்கு கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட முடியாது எனவும் அறிவித்திருந்தது. குறித்த இந்த குற்றச்சாட்டை முற்றிலும் எதிர்த்திருந்த அவர், இலங்கை கிரிக்கெட் சபை அவரை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இவ்வாறான நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்து வந்த ஐ.சி.சி இன் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு வகை குற்றச்சாட்டுகளை நீக்கியுள்ளதுடன், மீண்டும் இவர் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது.

இதே மோசடி தடுப்பு விதிகளின் கீழ் இலங்கையின் முன்னாள் வீரர் நுவன் சொய்ஸாவுக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் ஒன்றில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் கண்டறிந்ததுடன், அவர் மீதான மற்றைய மூன்று குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பான விரிவான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும், மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது எனவும் ஐ.சி.சி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நுவன் சொய்ஸாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, கடந்த மாதம் அவருக்கு 6 ஆண்டுகள் தடையினை, ஐ.சி.சி இன் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.