July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்வாகம் 450 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை தமிழக முதலமைச்சரிடம் வழங்கியது

Photo: CSK Twitter

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் நோயாளிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில், 450 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலை தீவிரமடைந்து நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதில் ஐ.பி.எல் தொடரில் உள்ள 8 அணிகளையும் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும், தங்களால் முடிந்த உதவிகளை கொரோனாவுக்கு எதிரான நிவாரணப் பணிக்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கி வருகின்றனர்.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 450 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளதாக அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத், மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இயக்குநர் ஆர். ஸ்ரீனிவாசன் ஆகியோர் 450 ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

தன்னார்வ தொண்டு நிறுவனமான பூமிகா அறக்கட்டளை இந்த ஒக்ஸிஜன் செறிவூட்டிகளை பகிர்ந்தளிப்பது உள்ளிட்ட தேவையான உதவிகளை சென்னை அணிக்கு வழங்கும்.

முதல்கட்ட ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன.அடுத்த கட்டமாக அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் வந்து சேரும் என சென்னை நிர்வாகம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் கொவிட் சிகிச்சை மையங்கள் ஆகியவற்றுக்கு இந்த ஒக்ஸிஜன் வழங்கப்படும்.

இது தொடர்பில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், சென்னை மக்கள், தமிழக மக்களின் இதயத்துடிப்பாக சென்னை அணி இருக்கிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என தெரிவித்தார்.

‘மாஸ்க் போடு’ எனும் பிரசாரத்தையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் சமூக வலைத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.