இலங்கை கிரிக்கெட் அணியினுடைய இளம் சகலதுறை வீரர்களான தனன்ஞய லக்ஷான், மற்றும் இஷான் ஜயரட்ன ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோவுடன் நேரடியான தொடர்புகளை பேணியதன் காரணமாகவே, இந்த இரண்டு வீரர்களுக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி பங்களாதேஷிற்கு சுற்று பயணம் மேற்கொள்கின்ற இலங்கை கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இந்த ஒரு நாள் தொடரில் விளையாடும் இலங்கையின் உத்தேச அணியில் பெயரிடப்பட்டிருந்த ஷிரான் பெர்னாண்டோ முதலில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், அவருடன் நேரடி தொடர்பை பேணிய சகலதுறை வீரர்களான லக்ஷான், மற்றும் இஷான் ஜயரட்ன ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், வைரஸ் தொற்றுக்கு இலக்கான வீரர்கள் மூவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த மூன்று வீரர்களுக்கு பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஒருநாள் சுப்பர் லீக்கினுள் அடங்கும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 23 ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 8 ஆம் திகதி செலுத்தப்பட்டது.
இதேவேளை, பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ள இலங்கை ஒருநாள் அணி விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.