Photo: BCCI
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளதாக பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில், விராத் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியாவின் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:
இலங்கைக்கு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள், ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. தனிமைப்படுத்தல் விதிமுறைகள் காரணமாக மீதமுள்ள ஐ.பி.எல் ஆட்டங்களை எங்கு நடத்தப் போகிறோம் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2ஆம் திகதி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நோக்கி புறப்பட்டுச் செல்கிறது. இதனால் இலங்கைக்கு செல்லும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
அதேபோல, இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவின் இரண்டாம் நிலை அணியொன்று தான் இலங்கை சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்வார்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த வருடம் ஜுன் மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடவிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
எனவே, இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் மீக நீண்ட இடைவெளியின் பிறகு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட தொடரொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.