January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்து ஆர்வம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவதற்கு கவுண்டி கிரிக்கெட் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14 ஆவது ஐ.பி.எல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தத் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் 31 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன.

இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்திய கிரிக்கெட் சபைக்கு ரூ.2,200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

எனவே மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டு வருகிறது. ஆனால், இந்தியா தற்போது உள்ள சூழலில் உலகக் கிண்ண தொடரே இங்கு நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

இதனிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, செப்டம்பர் 14 ஆம் திகதிக்குப் பின் இந்தியா திரும்பவுள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்தியாவில் அக்டோபர்–நவம்பரில் டி-20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. இதனால் இடைப்பட்ட 20 நாட்களில் ஐ.பி.எல் தொடரின் எஞ்சியுள்ள 31 லீக் போட்டிகளை, எப்படியாவது நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் மிடில்செக்ஸ், சர்ரே, வோர்விக்ஷெயர், லங்காஷெயர் உள்ளிட்ட கவுன்டி அணிகள் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.

இதற்காக லண்டனில் உள்ள லோர்ட்ஸ், லண்டன் ஓவல், எட்ஜ்பாஸ்டன் (பேர்மிங்கம்), ஓல்ட் டிரபோர்ட் (மான்செஸ்டர்) மைதானங்கள் தயாராக உள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியுள்ளன.

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றால் ஆடுகளங்கள் மந்தமாகி விடும். பிறகு டி-20 உலகக் கிண்ணம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதிக ஓட்டங்கள் குவிக்க முடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இங்கிலாந்தில் ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது குறித்து இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இது அனைத்து அணி வீரர்களுக்கும், டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்பப்படுகிறது.