November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீராங்கனைக்கு கொரோனா!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் 10 வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை இலக்காக கொண்டு இலங்கை மகளிர் அணி வீராங்கனைகள் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் வதிவிட பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அனைத்து வீராங்கனைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், அதன்போது ஊருக்கு சென்று திரும்பிய குறித்த வீராங்கனைக்கு மேற்கொள்ளப்பட்டபி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொவிட்-19 தொற்றுக்குள்ளாகிய வீராங்கனை தொடர்பான செய்திகள் வெளியாகாத நிலையில், அவரை உடனடியாக கடற்படையின் சிறப்பு கொவிட்-19 சிகிச்சை மையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த வீராங்கனையுடன் தொடர்பில் இருந்த இளம் வீராங்கனைகள் இருவர் வெல்லம்பிட்டியில் உள்ள சிறப்பு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம், கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், விடுமுறைக்கு சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் எஞ்சிய வீராங்கனைகளை வீடுகளில் தங்கியிருக்கும்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.