July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை; திமுத்துக்கு 11 ஆவது இடம்: இளம் வீரர் பிரவீனும் முன்னேற்றம்

Photo: SLC media

ஐ.சி.சி இன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அத்துடன், இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 48 ஆவது இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் மற்றும் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல்  வெளியிடப்பட்டது.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் மற்றும் அரைச்சதம் விளாசி இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன  712 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தை  பிடித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரட்டைச் சதம், சதம் மற்றும் அரைச்சதம் உள்ளடங்கலாக 428 ஓட்டங்களை குவித்த திமுத் கருணாரத்ன தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதனிடையே, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 21 ஆவது இடத்தில் இருந்த அஞ்சலோ மெதிவ்ஸ், 24ஆவது இடத்துக்கும், 28 ஆவது இடத்தில் இருந்த தனன்ஜய டி சில்வா 32 ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

அதேபோல, 35 ஆவது இடத்தில் இருந்த நிரோஷன் டிக்வெல்ல 31 ஆவது இடத்தையும், 73 ஆவது இடத்தில் இருந்த லஹிரு திரிமான்ன 60 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பங்களாதேஷ் அணி வீரர்களை பொறுத்தமட்டில், தமீம் இக்பால் 27 ஆவது இடத்தையும், முஸ்பிகுர் ரஹீம் 21 ஆவது இடத்தையும், மொமினுல் ஹக் 30ஆவது இடத்தையும் பெற்று கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஐ.சி.சி இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையின் முதல் மூன்று இடங்களையும் கேன் வில்லியம்சன் (நியூசி.) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.), மார்னஸ் லப்புஸேன் (ஆஸி.) ஆகியோர் தக்கவைத்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில் அறிமுகமாகி 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரவீன் ஜயவிக்ரம ஐ.சி.சி இன் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் நேரடியாக 48 ஆவது இடத்தை  பிடித்தார்.

அதேபோல, இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் பந்து வீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 88 ஆவது இடத்தைப் பெற்று கொண்டுள்ளார்.

இதனிடையே, ஐ.சி.சி இன் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், இந்தியாவின் அஸ்வின், நியூசிலாந்தின் நீல் வேங்கர்  ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.