November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் ஒத்திவைப்பு: சொந்த நாட்டில் நுழையத் தடை; இலங்கை வரும் ஆஸி. வீரர்கள்

ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையில் அல்லது மாலைதீவுகளில் சில தினங்கள் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் நிர்வாகம் செய்து வருவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அவுஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டதால் ஐ.பி.எல் இல் பங்குபற்றிய அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் ஐ.பி.எல் விளையாட சென்றுள்ள அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மே 15 ஆம் திகதி வரை நாட்டில் நுழைய அனுமதி கிடையாது என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

அதேபோல, அஸ்திரேலியா பிரஜைகள் எவரும் 15 ஆம் திகதிவரை நாட்டுக்குள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என உத்தரவிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாகவே அடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், அன்ட்ரு டை உள்ளிட்டோர் அவுஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள், வர்ணனையாளர்கள், பயிற்சியாளர், ஊழியர்கள் என 40 அவுஸ்திரேலியர்கள் இந்தியாவில் சிக்கியுள்ளனர்.

இதன்காரணமாக அவர்கள் மாலைதீவுகளில் சில நாட்களை கழிப்பர் என அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் ஏற்பட்டு அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கையில் அல்லது மாலைதீவுகளில் தங்கிவிட்டு நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவது குறித்து பேசியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லே, அவுஸ்திரேலிய வீரர்களை அழைத்து வருவதற்கு 2 விடயங்களை செய்ய வேண்டும்.

முதலில் இந்தியாவில் இருந்து வெளியேற்றி இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் வீரர்களை தங்கவைக்க பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்து வருகிறது. அங்கு அவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பார்கள். அதேபோல வேறு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா எனவும் பார்த்து வருகிறது.

இரண்டாவது விடயமாக வீரர்களை தனி விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கவும் பி.சி.சி.ஐ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மே 15 ஆம் திகதிக்கு பிறகு அவுஸ்திரேலிய அரசு என்ன முடிவெடுக்க போகிறது என்பதற்காக காத்துள்ளோம். அனுமதி கிடைத்துவிட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்துவிடுவோம் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக் ஹஸி, இந்தியாவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றையவர்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் இந்தியாவிலிருந்து வெளியேறவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தியாவில் இருந்து வருவோரை இலங்கையில் தனிமைப்படுத்தும் திட்டம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையிலேயே, ஐ.பி.எல் போட்டித் தொடரில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.