அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 27, 29, 42, மற்றும் 46 வயதுடைய நால்வரை சிட்னி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
50 வயதான மெக்கில், சிட்னியின் புறநகரான க்ரிமோர்ன் பகுதியில் வைத்து கடந்த மாதம் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர் சிட்னி முழுவதும் பொலிஸார் நடத்திய தேடுதலின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை மெக்கில் அறிந்திருந்ததாகவும், பணம் பறிப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடத்தலின் போது மெக்கில் சிறு காயத்துக்குள்ளான போதிலும் மருத்துவ சிகிச்சை பெறும் அளவுக்கு அந்த காயம் பெரிதாக இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, மெக்கில்லின் காதலியின் சகோதரரையும் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 1998 முதல் 2008 வரை சுழல் பந்து வீச்சாளராக மெக்கில் விளையாடியிருந்தார்.
அவர் விளையாடிய காலப்பகுதியில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ஸ்டுவர்ட் மெக்கில் இருந்தார்.
ஸ்டுவர்ட் மெக்கில் 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 208 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்துடன், அந்த அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற நால்வரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.