July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்ததால் பி.சி.சி.ஐ.க்கு 2000 கோடி ரூபா நஷ்டம் ஏற்படலாம் என தெரிவிப்பு

கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டி தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டமையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு 2000 கோடி இந்திய ரூபா நஷ்டம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றும் மூன்று அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஐ.பி.எல் போட்டிகளை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று நோயினால் இந்தியாவில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களில் ஐ.பி.எல் போட்டியுடன் நேரடியாக தொடர்புபட்ட ஆறு பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டி தொடரின் எஞ்சிய போட்டிகளை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக பி.சி.சி.ஐ அறிவித்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பி.சி.சி.ஐ.க்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தின் மதிப்பு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி, பி.சி.சி.ஐ.க்கு இந்திய பணப்பெறுமதியில் ரூ.2000 முதல் 2500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகப்படியான நஷ்டம் தொலைக்காட்சி ஒளிபரப்பை செய்வதில் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஐ.பி.எல் தொடரை ஒளிபரப்புச் செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ.3,269.4 கோடி ஆகும்.

ஒரு ஐ.பி.எல் போட்டிக்கு ரூ.54.5 கோடி ஆகும். அதன்படி பார்த்தால் இந்தாண்டு மொத்த 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. எஞ்சியுள்ள 31 போட்டிகள் உள்ளன. எனவே இதன் மூலம் மட்டும் ரூ.1690 கோடி பி.சி.சி.ஐ.க்கு நஷ்டம் ஏற்படவுள்ளது.

இதேபோல, ஐ.பி.எல் தொடரின் அனுசரணையாளரான விவோ ஒரு சீசனுக்கு ரூ.440 கோடி செலுத்துகிறது. இந்தாண்டு அதில் அரைவாசி தொகை மட்டுமே பி.சி.சி.ஐ.க்கு கிடைக்கும். மேலும், ட்ரீம் 11, Cred, Upstox, டாடா மோட்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் ரூ.120 கோடி வழங்கி வருகின்றது.

இது குறித்து பேசியுள்ள பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரூ.2000 முதல் 25000 வரை நஷ்டம் அடையும். சரியான கணக்கின்றி சொன்னால் ரூ.2200 கோடி எப்படியும் நஷ்டமாகும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றாலும், பி.சி.சி.ஐ.க்கு பல கோடி ரூபா நஷ்டத்தை இழக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.