Photo:BCCI/IPL
ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட்டில் சன்ரைசஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பதிவுசெய்தது.
இது சன்ரைசஸ் அணிக்கு நான்காவது தோல்வி என்பதுடன் அவர்கள் ஐந்தாமிடத்துக்கு தள்ளப்பட்டனர்.
ஆட்டம் துபாயில் நடைபெற்றதுடன் இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் டேவிட் வோனர் 2 சிக்ஸர்களுடன் 48 ஓட்டங்களையும், மனிஸ் பாண்டே 54 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் ஜொப்ரா ஆச்சர், கார்திக் தியாகி, உன்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ரொபின் உத்தப்பா என சகல துடுப்பாட்ட நட்சத்திரங்களுடன் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு தோல்வியடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இருந்த போதிலும் ஆர். பராக் 26 பந்துகளில் 42 ஓட்டங்களையும், ஆர்.டிவேட்டா 45 ஓட்டங்களையும் பெற்று வெற்றி பெறும் நம்பிக்கையை உருவாக்கினர்.
ஒரு சந்தர்ப்பத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெறுவது கடினமாக இருந்தாலும், பின்வரிசை வீரர்களின் பொறுமையான துடுப்பாட்டம் ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.கே.கே அஹமட், ரஸிட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் ஏனைய வீரர்களால் எதிர்பார்த்தளவு பந்துவீச்சில் பிரகாசிக்க முடியவில்லை.