February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மும்பை இந்தியன்ஸின் வெற்றிநடை தொடர்கிறது

Photo:BCCI/IPL

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் வெற்றியுடன் வீறுநடை போடுகின்றது.

டெல்லி கெபிடெல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளும் 24 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. பிருத்திவ் ஷோ, அஜின்கெயா ரஹானே ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். 

Photo:BCCI/IPL

ஆனாலும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் ஜோடி 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு கொண்டுவந்தது.ஸ்ரேயாஸ் ஐயர் 42 ஓட்டங்களுடன் வெளியேற ஷிகர் தவான் 69 ஓட்டங்களைப் பெற்றார். 

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 13 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெரே 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. 

பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் பௌல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

163 ஓட்டங்களை நோக்கிக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலேயே நெருக்கடிக்குள்ளானது. அணித்தலைவர் ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடன் அரங்கம் திரும்பினார். 

குயின்டன் டி கொக் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 32 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களையும் பெற்று மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 

இஷான் கிஷான் 2 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் 28 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை அண்மிக்கச் செய்தார். ஆட்டத்தில் 18 பந்துகளில் 18 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது, இஷான் கிஷானின் பிடி தவறவிடப்பட்டு சிக்ஸராகவும் பதிவானது. இதனால் மும்பை அணியின் வெற்றி இலகுவானது. 

என்றாலும் அடுத்த பந்தில் இஷான் கிஷான் உயர்த்தி அடித்த பந்தை அக்ஸார் பட்டேல் அபாரமாகப் பிடியெடுக்க 17.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு ஐந்தாவது விக்கெட்டை மும்பை இழந்தது. அதன் பிறகு டெல்லி வீரர்கள் துல்லியமாக பந்துவீசினாலும் அதனை லாவகமாக எதிர்கொண்ட கிரான் பொலார்டும், ஹர்திக் பாண்ட்யாவும் சாதுரியமாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கைக் கடந்தது. 

கெகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், அக்ஸார் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மும்பை அணி தொடரில் 7 ஆட்டங்களில் பங்கேற்று ஐந்தாவது வெற்றியை ஈட்டி முதலிடத்துக்கும் முன்னேறியது. டெல்லி கெபிடெல்ஸ் அணியும் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ளது.