July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் கால வரையறையின்றி இடைநிறுத்தம்!

வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி-20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் விருதிமான் சாஹா, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், ஐ.பி.எல் தொடர் தேவைதானா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதேபோல, மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், ஐ.பி.எல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, ஐ.பி.எல் டி-20 தொடரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிசிசிஐ இன் கொரோனா வழிகாட்டுதலின்படி, கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வீரர்கள் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் 6 நாட்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், 3 முறை நடக்கும் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வர வேண்டும்.

ஏற்கெனவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது மேலும் 3 அணிகள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படும்போது, போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது இயலாது என்பதால், ஐ.பி.எல் டி-20 தொடரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகத்தினர், ஒளிபரப்பாளர்களுடன் பேசி வருகிறோம்.

நாட்டில் உள்ள சூழல், மக்கள் மனநிலை ஆகியவற்றைக் கவனிப்பதால், தற்காலிகமாக ஐ.பி.எல் தொடரை ஒத்திவைக்கிறோம். இந்த மாதத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்த வாய்ப்பில்லை.

வீரர்களின் உடல்நிலை பிசிசிஐக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விரைவில் மீண்டும் கூடி தொடர் குறித்தும், எப்போது தொடரை முடிப்பது என்றும் முடிவு செய்வோம்”

எனத் தெரிவித்தார்.