
ஐரோப்பிய கார்ட்டிங் கார்ப்பந்தய சம்பியன்ஷிப் (Karting Race) தகுதிகாண் போட்டி ஒன்றில் 13 வயதான இலங்கையின் யெவான் டேவிட் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், சர்வதேச கார்ட்டிங் கார் பந்தய போட்டியொன்றில் இலங்கை வீரரொருவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதி உயர்ந்த வெற்றிகளில் ஒன்றாக இது இடம்பிடித்துள்ளது.
2021 ஐரோப்பிய கார்ட்டிங் கார் பந்தய சம்பியன் ஷிப் போட்டிகள் பெல்ஜியத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற A முதல் F குழு வரைக்குமான தகுதிகாண் போட்டியில் பங்கேற்ற யெவான் டேவிட் முதலிடத்தை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தினார்.
சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்ற யெவான், இந்தப் போட்டித் தொடரில் போர்சா ரேஸிங் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி Ok Junior Class பிரிவில் போட்டியிட்டார்.
உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த 92 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டித் தொடரின் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் யெவானுக்கு 15 ஆவது இடம் கிடைத்துள்ளது.
அதன்பிறகு, காலிறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பும் யெவானுக்கு கிடைத்தது.
இதன்படி, 35 வீரர்கள் பங்குகொண்ட இறுதிச் சுற்றில் யெவான் டேவிட்டுக்கு 15 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
எது எவ்வாறாயினும், முதல் சுற்றுக்காக நடைபெற்ற 5 சுற்றுகளைக் கொண்ட தகுதி சுற்றுப் போட்டியின் 4 ஆவது சுற்றில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட யெவான், சர்வதேச கார்ட்டிங் கார்ப்பந்தய போட்டித்தொடரொன்றில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
குறித்த போட்டியில் வெற்றியீட்டிய யெவான் டேவிட்டுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, OK Junior Class சம்பியன்ஷிப்பில் முதலிடத்தை பிரித்தானியாவைச் சேர்ந்த Freddie Slater பெற்றுக்கொள்ள, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை Harry Keeble, Sony Smith பெற்றுக்கொண்டனர்.