இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையிடம் திசர பெரேரா சமர்ப்பித்துள்ளார்.
எனினும், இது தொடர்பான தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை.
அதேநேரம், திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள திசர பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காரணத்தை இதுவரை குறிப்பிடவில்லை.
எது எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்துவரும் தொடர்களில், திசர பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் பலர் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என தகவல் வெளியாகி இருந்த பின்னணியில் அவர் தமது ஓய்வை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரராக வலம்வந்த திசர பெரேரா, ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
திசர பெரேரா இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாக, 2014 ஆம் ஆண்டு டி-20 உலகக் கிண்ணத் தொடர் அமைந்திருந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக பிரகாசித்திருந்த திசர பெரேரா, இறுதிப் போட்டியில் சிக்ஸருடன் இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.
அதேநேரம், இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் இவர் விளையாடியிருந்தாலும், 166 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதில், ஒருநாள் போட்டிகளில் 2338 ஓட்டங்கள் மற்றும் 175 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர், டி-20 போட்டிகளில் 1204 ஓட்டங்கள் மற்றும் 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.