January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவின் சாதனையுடன் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 209 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியில் புதுமுக வீரராக களமிறங்கிய 22 வயதுடைய இடதுகை சுழல்பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட் வீழ்த்தி, இலங்கை சார்பாக அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சு பெறுமதி மற்றும் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2018 இல் அகில தனஞ்சய 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்த நிலையில், பிரவீன் ஜயவிக்ரம 178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

கண்டி – பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இதற்கமைய தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களையும், மற்றும் லஹிரு திரிமான்ன 140 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொண்டனர்.

மேலும், ஓசத பெர்னாண்டோ 81 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 83 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

அவ்வணி சார்பாக தமிம் இக்பால் அதிகபட்சமாக 92 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

பந்து வீச்சில் அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் குவியலை எடுத்த 6 ஆவது இலங்கை பந்து வீச்சாளராகவும், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்த 2ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்று கொண்டார்.

இதன்படி, 242 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 66 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று கொண்டனர்.

இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 437 என்ற இமாலய ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதன்படி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரவீன் ஜயவிக்ரம போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதுடன், பல முக்கிய சாதனைகளையும் முறியடித்தார்.

அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த அதி சிறந்த பந்துவீச்சு பெறுதியாகவும் (178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள்) இது இடம்பிடித்தது.

முன்னதாக 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் உபுல் சந்தன, 179 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததே இதுவரை காலமும் சாதனையாக இருந்தது.

எனவே, சுமார் 22 வருடங்களுக்கு பிறகு அந்த சாதனையை இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரம முறியடித்தார்.

அதேநேரம், தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டை  கைப்பற்றிய முதல் இலங்கை வீரர், முதலாவது இடதுகை சுழல் பந்துவீச்சாளர், இலங்கையின் இரண்டாவது இளம் வீரர் மற்றும் உலகின் 16 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்று கொண்டார்.

இதற்கு முன் இந்தியாவின் நரேந்திர ஹிரவானி (1988), பாகிஸ்தானின் மொஹமட் சாஹிட் (1996) மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் க்ரீஜா (2008) ஆகியோர் அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தத் தொடரில் இரட்டைச்சதம், சதம் மற்றும் அரைச்சதம் உள்ளடங்கலாக 428 ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அதனடிப்படையில் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

இலங்கை அணி 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதேநேரம், ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட இரண்டாவது வெற்றியாகவும், முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் இது இடம்பிடித்தது.