November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் தோற்றது சென்னை – நான்காமிடத்துக்கு முன்னேறியது பெங்களுர்!

Photo:BCCI/IPL

ஐபிஎல் போட்டிகளில் வழமையாக வெற்றிகளைக் குவிக்கும் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்தமுறை தொடர்ந்தும் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி தொடரில் ஆறாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 13 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஏரோன் பிஞ்ச் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

டெவ்டட் படிக்கால் 33 ஓட்டங்களுடனும், ஏபி டிவிலியர்ஸ் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க பெங்களுர் அணியின் நிலைமை கேள்விக்குறியானது. என்றாலும், அணித்தலைவர் விராத் கொஹ்லி தனி ஒருவாராக ஆட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு அபாரமாக ஓட்டங்களைக் குவித்தார்.

Photo:BCCI/IPL

ஒரு கட்டத்தில் பெங்களுர் அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களையே பெற்றிருந்தது. ஆனாலும், அடுத்த 33 பந்துகளில் 76 ஓட்டங்கள் கிடைக்க கோஹ்லி வழிசெய்தார். 52 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.

பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

170 ஓட்டங்களை நோக்கிக் களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேன் வொட்ஸன், பெப் டு பிலெசி ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாட முயற்சித்த அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு அடுத்த பந்தில் சிக்கி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Photo:BCCI/IPL

அம்பாட்டி ராயுடு 42 ஓட்டங்களையும், ஜெகதீஸன் 33 ஓட்டங்களையும் மந்த கதியில் பெற்றுக்கொள்ள பெங்களுர் அணியின் வெற்றி இலகுவானது.

ரவிந்ர ஜடெஜா, டுவேன் பிராவோ ஆகியோரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்கள். சென்னை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களையே பெற முடிந்தது.

கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டுகளையும், வொஸிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியுடன் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்துக்கு முன்னேறியது.