November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றியை கோட்டைவிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ்

Photo: BCCI/IPL

ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியீட்ட வாய்ப்பிருந்தும் சொதப்பலான துடுப்பாட்டத்தால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணி நிர்ணயித்த 168 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணியால் 157 ஓட்டங்களையே பெற முடிந்தது.

அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது.

சுப்மன் கில், நித்திஸ் ராணா, சுனில் நரைன், இயோர்ன் மோர்கன் ஆன்ரே ரஸல், அணித்தலைவர் தினேஸ் கார்த்திக் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஆனாலும், தனி ஒருவராகப் பிரகாசித்த ராகுல் திரிபாட்டி 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 81 ஓட்டங்களைக் குவித்து அணியை வலுப்படுத்தினார்.

அவரது இந்த அருமையான துடுப்பாட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

டுவேன் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஸாம் கரன், எஸ்.என் தாகூர், கேவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 168 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக பெப் டு பிலெசி மற்றும் ஷேன் வொட்ஸன் ஜோடி 3.5 ஓவர்களில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
டு பிலெசி 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்துவந்த அம்பாட்டி ராயுடு 30 ஓட்டங்களையும், ஷாம் கரன் 17 ஓட்டங்களையும் பெற்றனர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷேன் வொட்ஸன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனாலும், ஏனைய துடுப்பாட்ட வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை.

கடைசி ஓவரில் 22 ஓட்டங்கள் தேவையாக இருந்த போதிலும் அதனை சென்னை அணி வீரர்களால் அடைய முடியவில்லை.

கேதர் யாதவ்வின் சொதப்பலான துடுப்பாட்டத்தின் காரணமாகவே தோல்வியடைய நேரிட்டது. அதிலும் குறிப்பாக கேதர் யாதவ் தனது முதல் ஓட்டத்தை சென்னை அணி பெறுவதற்கே 6 பந்துகளை வீணடித்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஒருவேளை கேதர் யாதவ் சொதப்பிய நேரத்திற்கு டுவேன் பிராவோ களமிறங்கி இருந்தால் நிச்சயமாக சென்னை அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. கேதர் யாதவ் ஓட்டங்களைப் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

ரவிந்திர ஜடெஜா 8 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்று அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

ஆனால், அது எதுவுமே கொல்கத்தாவின் வெற்றிக்கு தடையேற்படுத்தவில்லை.

சிவம் மவி, சிவி வருன், நாகிரொட்டி, சுனில் நரைன், ஆன்ரு ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இது இந்தமுறை ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தாவுக்கு மூன்றாவது வெற்றி என்பதுடன் சென்னைக்கு நான்காவது தோல்வியாகும்.