January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடர் நான்கு மைதானங்களில் நடத்தப்படும்’;விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கையில் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடரை நான்கு கிரிக்கெட் மைதானங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்தகொண்டு உரையாற்றி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கலந்துகொண்டு பேசிய அவர்,

மற்றைய நாடுகளைக் காட்டிலும் நாங்கள் சிறப்பான முறையில் பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றோம். இங்கு எமது வீரர்களைப் போல வெளிநாட்டு வீரர்களும் பாதுகாப்பாக உள்ளார்கள்.

அதேபோல, இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் மாத்திரமல்லாது பல சர்வதேச போட்டிகளையும் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

இதில் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் டி-20 தொடரை சூரியவெ, தம்புள்ள, கண்டி மற்றும் கொழும்பில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த வருடம் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ரசிகர்களின்றி மூடிய மைதானத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த வருடம் நாட்டின் சூழ்நிலையை வைத்து ரசிகர்களை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கை அணி வீரர்களுக்குமிடையிலான கண்காட்சி டி-20 போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியின் மூலம் கிடைக்கின்ற நிதியானது இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதால் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அது தொடர்பில் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், கால்பந்து சுப்பர் லீக், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் கரப்பந்தாட்ட தொடர்களை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி எந்தவொரு இடையூறுமில்லாமல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.