Photo: ICC
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் இவ்வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் 2021 டி-20 உலகக் கிண்ணம் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்தது. இதனால் 2022 டி-20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அப்போட்டி நடைபெறும் என பி.சி.சி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், பி.சி.சி.க்கு அளித்த பேட்டியில் பி.சி.சி.ஐ சேர்ந்த மூத்த அதிகாரியான திரஜ் மல்ஹோத்ரா கூறியதாவது:
டி-20 உலகக் கிண்ணப் போட்டியின் இயக்குநர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்.
ஒருவேளை, கொரோனா நிலைமை தொடர்ந்து நீடித்தால் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும். அங்கு நடந்தாலும் போட்டியை பி.சி.சி.ஐ தான் நடத்தும் என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் இம்முறை டி-20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட 9 இடங்களை பி.சி.சி.ஐ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.