பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவெக் ஜோகோவிச் அரை இறுதியை உறுதி செய்துகொண்டார்.
காலிறுதிப் போட்டியில் அவர் ஸ்பெய்னின் பெப்லோ கெரினோவை வீழ்த்தினார்.
போட்டியின் ஆரம்பத்தில் ஜோகோவிச்சுக்கு கழுத்தில் உபாதை ஏற்பட்டதுடன் அதற்காக அவர் சிறிது நேரம் வைத்திய சிகிச்சையுடன் ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் முதல் செட் ஆட்டத்தை 6-4 எனும் கணக்கில் பெப்லோ கைப்பற்றி சவால் விடுத்தார்.
என்றாலும் அதன் பின்பு சுதாகரித்துக் கொண்டு விளையாடிய ஜோகோவிச் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாம் மூன்றாம் செட்களை 6-2, 6-3 என தன்வசப்படுத்திய ஜோகோவிச் நான்காம் செட்டையும் 6-4 என தனதாக்கி வெற்றியீட்டினார்.
உபாதையுடன் தாம் பெற்ற இந்த வெற்றி தம்மை சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளதென 33 வயதுடைய நொவெக் ஜோகோவிச் கூறினார்.
17 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வருடம் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியனாகும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்.