
Photo:BCCI/IPL
ஐ.பி.எல் இருபது -20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
சன்ரைசஸ் அணி நிர்ணயித்த 202 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 132 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசஸ் அணி தலைவர் டேவிட் வோனர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இவர்கள் முதல் விக்கெட்டுக்காக 15.1 ஓவரில் 160 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
டேவிட் வோனர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொனி பெயார்ஸ்டோ 55 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களைக் குவித்தார்.
கேன் வில்லியம்ஸன் 20 ஓட்டங்களையும், அபிஸேக் சர்மா 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க சன்ரைசஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைக் குவித்தது.
ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளையும், அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

கடினமான இலக்கான 202 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் அணி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மயன்க் அகர்வால், அணித்தலைவர் லோகேஸ் ராகுல், சிம்ரன் சிங் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்கள்.
எனினும், திறமையை வெளிப்படுத்திய நிகோலஸ் பூரான் 37 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு நம்பிக்கையூட்டினார்.
ஆனாலும், ஏனைய வீரர்களோ அடுத்தடுத்து குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
கிளென் மெக்ஸ்வெல், மந்தீப் சிங் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் மந்தமாக செயற்பட சன்ரைசஸ் அணியின் வெற்றி இலகுவானது. பஞ்சாப் அணியின் கடைசி 6 விக்கெட்டுகளும் வெறும் 27 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
ரஸிட் கான் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேகே அஹமட், ரி.நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். அவர்கள் புள்ளிகள் பட்டியலில் தற்போதைக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார்கள்.
கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி தாம் விளையாடிய 6 ஆட்டங்களில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்று, ஏனைய 5 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து மிகவும் பின்தங்கியுள்ளது.