கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு சாம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி சனிக்கிழமை ரோலண்ட் காரோஸில் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனைகளான அமெரிக்காவின் சோபியா கெனின் (21 வயது) மற்றும் போலந்தின் இகா ஸ்வியாடெக் (19 வயது) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இதன் மூலம் பிரெஞ்ச் ஓபனில் இவ்வருடம் இளம் வீராங்கனை ஒருவர் சாம்பியனாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவ்வருடம் அவுஸ்திரேலிய ஓபனில் சாம்பியனான சோபியா கெனின் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை அரை இறுதியில் வென்றார். போட்டியில் அவர் 6-4, 7-4 எனும் நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
இதேவேளை, மற்றைய அரை இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆர்ஜென்டினாவின் நடியா பொடொர்ஸ்காவை 6-2, 6-1 எனும் நேர் செட்களில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியை உறுதிசெய்தார்.
இந்தப் போட்டி 70 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்த்துடைய டென்னிஸ் தொடரொன்றில் இகா ஸஸ்வியாடெக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதேபோன்று ரஸ்யாவில் பிறந்து அமெரிக்கா சார்பாக விளையாடும் சோபியா கெனின் முதல் தடவையாக பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.