January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிரேஷ்ட வீரர்களுடனான டி-20 போட்டி: இலங்கை அணியில் யாழ். வீரர் வியாஸ்காந்த்!

இலங்கை சிரேஷ்ட வீரர்கள் அணியுடனான கண்காட்சி டி-20 போட்டிக்கான இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நட்சத்திர வீரரான விஜயகாந்த் விஜாஸ்காந்த் இடம்பிடித்துள்ளார்.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸுக்கு நிதி திரட்டும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பதினொருவர் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான கண்காட்சி டி-20 போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி கண்டி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டியை நேரடியாக கண்டு களிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதிலும், நேரடி ஒளிபரப்பை தேசிய தொலைக்காட்சி வாயிலாக பார்ப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பதினொருவர் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜயசூரிய செயற்படவுள்ளதுடன், 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அரவிந்த டி சில்வா, உபுல் தரங்க, உப்புல் சந்தன, சாமர சில்வா, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், மலிந்த வர்ணபுர, சமன் ஜயரத்ன, ஜெஹான் முபாரக், திலின துஷார மிரண்டோ மற்றும் இந்திக்க டி சேரம் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை சிரேஷ்ட வீரர்கள் பதினொருவர் அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஹ‌ஷான் திலகரத்ன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தமட்டில் இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை அபிவிருத்தி அணிகளில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை டி-20 அணியின் தலைவரான தசுன் ‌ஷானக்க தலைமையிலான இலஙகை அணியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான திசர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, இசுரு உதான, சதீர சமரவிக்ரம, பானுக ராஜபக்ஷ, ரமேஷ் மெண்டிஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், மொஹமட் சிராஸ், தனன்ஜய லக்‌ஷான், அஷேன் பண்டார, ஷிரான் பெர்னாண்டோ, மஹேஷ் தீக்சன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் மற்றும் கண்டி மதீனா மத்திய கல்லூரியின் பழைய மாணவனான மொஹமட் சிராஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

இதில் அண்மையில் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரிமியர் லீக் டி-20 தொடரில் விஜயகாந்த் விஜாஸ்காந்த் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காகவும், மொஹமட் சிராஸ் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தனர்.

இதில் குறிப்பாக, இம்முறை ஐ.பி.எல் ஏலப்பட்டியலில் இலங்கை சார்பில் வியாஸ்காந்த் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.

அதுமாத்திரமன்றி, ஏராளமான தேசிய வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்தில் தமது பெயரை பதிந்திருந்தாலும் இறுதியில் ஏலத்துக்கு இணைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குறும்பட்டியலில் விஜயகாந்த் விஜாஸ்காந்த் பெயர் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.